May 31, 2012

வாழ்க தமிழ் !


நமது தாய்மொழி என்ன ? ” இதென்ன கேள்வி ! தமிழ்தான்என்று நீங்கள் பெருமையுடன் கூறலாம். இன்று தமிழ்நாட்டில் தமிழின் பெருமை பரவலாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. தமிழைக் காக்கவென்றே ஒரு கூட்டமும் இருக்கிறது. எனினும் நம்மில் எத்தனை பேர் தாய்மொழியான தமிழ் வழிக்கல்வியை ஆதரிக்கிறோம் ? எளிதாக எண்ண முடிந்த சிலரே.



தமிழ்மொழியின் காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியையே அளிக்கிறார்கள்

இவற்றையெல்லாம் தாண்டி தங்கள் பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைக்கும் ஏழைப் பெற்றோர் சிலர் அதை வெளிக் காட்டிக் கொள்ள வெட்கப்படுகின்றனர். பள்ளி முடித்து கல்லூரி செல்லும் மாணவர்கள் சிலர் தாங்கள் தமிழ் வழிக்கல்வி கற்றதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர். விளைவு. கல்லூரி பாடங்கள் புரியாததால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை முடிவை நாடுகின்றனர். நம்மில் பலர் படிக்க நேரமில்லாமல் கடந்து செல்லும் இந்த மாதிரி தற்கொலைகளுக்கு பின்னால் ஒரு சோகக்கதையும் , சமுதாயத்திற்கு ஒரு பாடமும் அடங்கி இருக்கிறது. ஏன் ? காரணம்……

இந்த சபிக்கப்பட்ட சமுதாயத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பெற்றோர் அளிக்கும் வாய்ப்புகள் இரண்டு. 1. டாக்டர்  2. இன்ஜீனியர் ( மேற்கண்ட இரண்டு வார்த்தைகளையும் நான் மருத்துவர், பொறியியல் வல்லுநர் என்று குறிப்பிடுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா! ) ஒவ்வொரு குழந்தையும் இவற்றில் ஏதாவது ஒன்றையே தனது எதிர்காலமாக தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகிறது.

இந்த இரு துறைகளையும் தமிழில் கற்க எந்த வாய்ப்பும் இல்லாததால் தமிழ் வழிக்கல்வி நலிவடைந்து வருகிறது. ஒரு மனிதனால் தாய்மொழியில் மட்டுமே மிகத் தெளிவாக சிந்திக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை. அதுவே மிகச் சிறந்த விஞ்ஞானிகளையும் , சிந்தனையாளர்களையும் உருவாக்க முடியும். ஜப்பான் , ஜெர்மனி போன்ற தொழில்நுட்ப வல்லரசுகள் தங்கள் தேவைகளுக்கு ஆங்கிலத்தை நம்பி இல்லை. நமது இப்போதைய தேவை ஒரு மாற்றம். வருமா ? விடையை எதிர்நோக்கியுள்ள ஒரு உண்மையான தமிழன்…..

No comments:

Post a Comment